Thursday, June 21, 2012

காலத்துக்கு வணக்கம்


(நேர நிர்வாகம் பற்றிச் சில சிந்தனைகள்)
காலம் என்பது நான்காவது பரிமாணமாகக் கருதப்படுகிறது. அதனால்தான் அது நமது கைகளுக்குள் புலப்படாமல் நழுவி விடுகிறது. 'Times slips through your fingers' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது நேரம் நமது விரல் இடுக்குகள் வழியே நழுவி விடுகிறதாம்!

இவ்வுலகில் எப்போதும் நிலைத்திருப்பது, ஆனால் நாம் எப்போதும் இழந்து கொண்டிருப்பது, ஒருபோதும் திரும்பப் பெற முடியாதது காலம் ஒன்றுதான். காலனைச் சிறு புல்லாக மதித்து, அவனைக் காலால் மிதித்து, அவனைக் காலால் சற்றே உதைப்பதாகப் பாடினான் பாரதி - தனக்கு மரண பயம் இல்லை என்பதைக் காட்ட. நாமும் காலத்தை அலட்சியப்படுத்தி மரணத்தை நோக்கி விரைவாகப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

சரி, காலத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால் காலத்தை நிர்வகிக்கலாம். ஒவ்வொரு விநாடியையும் பயனுள்ளதாகச் செய்யலாம். இதை நேர நிர்வாகம் (Time Management) என்பார்கள்.

நேர நிர்வாகம் என்பது பொதுவாக நமது நேரத்தைத் திட்டமிட்டு வீணாக்காமல் பயன்படுத்துவது என்பதையே குறிக்கோளாகக் கொண்டது. ஆனால் இது நடைமுறையில் அவ்வளவு சுலபமில்லை. உலகெங்கும் நேர நிர்வாகம் பற்றி நாள்தோறும் கருத்தரங்குகளும், பயிற்சி வகுப்புகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றால் பயன் பெறுபவர் மிகச் சிலரே. சிகரெட், மது போன்ற பழக்கங்களை விட முயன்று தோற்றவர்கள் போல, நேர நிர்வாகத்தைக் கடைப்பிடிக்கப் பலமுறை முயன்று கைவிட்டவர்களே அதிகமாக இருப்பார்கள்!

இதற்குக் காரணம் நேர நிர்வாகம் விதிக்கும் பல கட்டுப்பாடுகளை நம்மால் கடைப்பிடிக்க முடியாமல் போவதுதான்.

எனவே முதலில் இந்தக் கட்டுப்பாடுகள் மீறப்படுவதைப் பெரும் பாவமாகக் கருதி நம்மை நாமே நொந்து கொள்ளும் வழக்கத்திலிருந்து நாம் விடுபட வேண்டியது மிகவும் அவசியம்.

கடுமையான கட்டுப்பாடுகளை விட, ஓரளவு மாற்றங்களை அனுமதிக்கக்கூடிய நேர நிர்வாகக் கோட்பாடுதான் அதிகம் பயனுள்ளதாக இருக்கும்.

இது எப்படி என்பதைச் சில உதாரணங்கள் மூலம் பார்ப்போம்.

1) செயல் திட்டங்கள் மிகவும் அவசியம். ஆனால் இவை மாற்ற முடியாத வேத நூல்கள் இல்லை. நமது வசதிக்கு ஏற்பத் திருத்தங்கள் செய்ய அனுமதிக்கும் அரசியல் சட்டம் போன்றவைதான் இவை. குறிப்பிட்ட ஒரு திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட கால அட்டவணைக்குள் அடங்காது என்றால், திட்டத்தையோ, கால அட்டவணையையோ மாற்றிக்கொள்ளத் தயங்கக்கூடாது.

ஒரு விற்பனைப் பிரதிநிதி ஒரு குறிப்பிட்ட வியாபாரத்தை முடிப்பதற்காக வெளியூருக்கு அனுப்பப்பட்டார். வேலை விரைவில் கட்டாயம் முடிய வேண்டும் என்பதற்காக, அவருக்கு வீட்டிலிருந்து கிளம்புவது முதல் திரும்ப வந்து சேரும் வரை செய்ய வேண்டிய ஒவ்வொரு வேலைக்கும் விரிவான அட்டவணை கொடுக்கப்பட்டு, நிகழ்ச்சி நிரலில் சிறு மாறுதல் இருந்தாலும், அவரது மேலதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கட்டளைகள் பெற வேண்டும் என்பது அவருக்குக் கொடுக்கப்பட்ட செயல் குறிப்பு. நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக,அவர் ரயிலிலேயே தன்னைத் தயார் செய்து கொண்டு, எட்டு மணிக்கு ரயில் போய்ச் சேர்ந்ததும், ஸ்டேஷன் கான்டீனிலேயே காலை உணவு அருந்தி விட்டு, ஆட்டோ பிடித்துப் போய் ஒன்பது மணிக்குள் குறிப்பிட்ட நபரைச் சந்திக்க வேண்டும் என்பது செயல் திட்டம்.

திட்டத்தில் சிறு மாறுதல் இருந்தாலும் மேலதிகாரியைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற அறிவுரையின்படி, விற்பனைப் பிரதிநிதி ஸ்டேஷனுக்கு வெளியே வந்து டெலிபோன் இருக்கும் இடத்தைத் தேடிப் பிடித்து மேலதிகாரிக்கு ஒரு டிரங்க் கால் போட்டார் (வசதி வருவதற்கு முந்திய காலம் அது) ஒரு மணி நேரம் காத்திருந்து மேலதிகாரி லயனில் கிடைத்ததும், 'சார், ஸ்டேஷன் கான்டீன் மூடியிருக்கிறது. இப்போது என்ன செய்வது?' என்றார்!

செயல் திட்டம் என்பது இது போல் புனித நூலாக இருக்கக் கூடாது.

'ஒரு தம்ளர் பால் தவறுதலாகக் கீழே கொட்டிக் கழிவு நீர்க் குழாய்க்குள் சென்று விட்டால், நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் கீழே கொட்டிய பாலில் ஒரு துளியைக்கூட உங்களால் திரும்பக்கொணர முடியாது' என்பார் டேல் கார்னகி. இழந்த நேரமும் அப்படித்தான். வீணான நேரமும் வீணானதுதான். வீணான நேரத்தைப்பற்ரி வருந்திக் கொண்டிருந்தால் இன்னும் சிறிது நேரம்தான் வீணாகும். எனவே நிகழ்ந்து விட்ட இழப்பை ஏற்றுக்கொண்டு, அதிலிருந்து எதிர்காலத்துக்கான பாடம் கற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

3) 'நான் எந்தச் செயலையுமே நாளைக்குத் தள்ளிப்போட மாட்டேன், அதை நாளை மறுநாள் செய்து கொள்ளலாம் என்கிறபோது' என்றார் ஆஸ்கார் ஒயில்ட் என்ற அறிஞர் வேடிக்கையாக. ஆனால் இதில் ஒரு ஆழமான உண்மை இருக்கிறது.

எதையுமே ஒத்திப் போடக்கூடாது என்பது நேர நிர்வாகத்தில் ஒரு தாரகமந்திரம்.

ஆனால் சில சமயம் இந்த மந்திரத்தை மீற வேண்டியதும் நேர நிர்வாகத்தில் ஒரு தந்திரம். ஒரு வேலையை இன்று செய்து முடிக்கத் திட்டமிட்டிருக்கிறீர்கள். அதில் உங்களுக்கு உதவ வேண்டிய ஒரு நபரால் இன்று வர முடியவில்லை. எப்படியும் ஒத்தி வைக்கக்கூடாது என்று பிடிவாதமாக அந்த வேலையைச் செய்ய முற்படுவதால் நேர விரயம்தான் ஏற்படும். வேலையை ஒருநாள் தள்ளி வைத்துக் குறிப்பிட்ட நபரின் ஒத்துழைப்புடன் செய்வதால் நேரம்,பொருள்,சக்தி ஆகியவை வீணாவதைத் தவிர்ப்பதுடன் வேலையையும் சிறப்பாகச் செய்து முடிக்கலாம்.


ஆனால் அந்த வேலை அன்றைக்கே செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருந்தால் (உதாரணம் - ஒரு முக்கியமான டெண்டர் அனுப்புவதற்கான கடைசித்தேதி அன்றுதான்), எப்படியும் அந்த வேலையைச் செய்துதான் தீர வேண்டும்.

4) வேலைகளைத் தாமதப்படுத்த வேண்டிய வேறு சில சந்தர்ப்பங்களும் உண்டு. கடிதம் எழுதித் தபாலில் சேர்க்க இன்று நேரம் போதுமானதாக இருக்காது என்று தோன்றினால், கடிதத்தை அடுத்த நாள் நிதானமாக எழுதுவதே சிறப்பு. (இன்றைய இன்டர்னெட் உலகத்தில் கடிதம் எழுதுவது என்பது எதோ கற்கால வழக்கமாகத் தோன்றலாம். ஆனால் அஞ்சல் அலுவலகங்கள் இன்ன்னும் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்ரன; அஞ்சல் பெட்டிகளும் கடிதங்களை வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றன!

அலுவலகத்துக்கு அவசரமாகக் கிளம்புகிறீர்கள். 9.28 ரயிலைப் பிடிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. அடுத்த ரயில் 9.38க்குத்தான் என்றால் அவசரமாக ஓடி ரயிலைத் தவற விடுவதைத் தவிர்த்து, கிடைத்திருக்கும் அதிக அவகாசத்தைப் பயன்படுத்தி சற்று நிதானமாகவே நடக்கலாமே!

5) செய்ய வேண்டிய வேலைகளைச் செய்வதில் அலுப்பும் சலிப்பும் ஏற்படுவது இயல்பு. இதைத் தவிர்க்க இரண்டு முறைகளைக் கையாளலாம்.

செய்ய வேண்டிய வேலைகளை
1) மிகவும் (செய்ய) விரும்புபவை
2) ஓரளவு செய்ய விரும்புபவை
3) செய்ய விரும்பாதவை
என்று மூன்று வகைகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள்.

என் பாட்டி குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது, தட்டில் இருந்த சாதத்தை இரண்டாகப் பிரித்து, இதில் பிடித்த பங்கு, பிடிக்காத பங்கு என்று இரண்டாகப் பிரித்துக்கொள்ளச் சொல்வார். முதலில் கதைகள் சொல்லி, பிடிக்காத பங்கைக் குழந்தைக்கு நைச்சியமாக ஊட்டி விடுவார். பிறகு பிடித்த பங்கைக் குழந்தையிடம் காட்டி 'இதுதான் உனக்குப் பிடித்ததாயிற்றே. சாப்பிட்டு விடு' என்று சொல்லி அதையும் உண்ண வைத்து விடுவார். குழந்தை எந்த வித ஊக்குவிப்புமின்றி தட்டைக் காலி செய்து விடும்!

அதுபோல, நமக்குச் செய்வதில் அதிகம் ஆர்வமில்லாத, ஆனால் செய்ய வேண்டிய வேலைகளை முதலில் செய்து விட்டால், நமக்கு ஆர்வம் உள்ள வேலைகளைச் செய்வது சுலபமாகி விடும். வேலைக்கு விண்ணப்பம் போட்டு அலுத்துப் போயிருக்கும் இளைஞன், தனக்கு ஆர்வம் இல்லாவிட்டாலும் அனுப்ப வேண்டிய விண்ணப்பங்களை முதலில் அனுப்பி விட்டால், அதற்குப் பிறகு காதலிக்குக் கடிதம் எழுதுவது என்ற வேலயைத் தானே செய்து முடித்து விடுவான்!

6) சில சமயம் இதற்கு நேர்மாறான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும் - குறிப்பாக அலுவலகப் பணிகளில். எனக்குத் தெரிந்த அதிகாரி ஒருவர் கடைப்பிடிக்கும் முறை இது. மேஜை மீது குவிந்து கிடக்கும் ஃபைல்களில், எளிதான, விரைவில் பார்த்து முடித்து விடக்கூடிய ஃபைல்களை முதலில் பார்த்து முடித்து விடுவார். பிறகு நிறைய ஃபைல்களைப் பார்த்து முடித்து விட்ட உற்சாகத்தில், மீதமுள்ள கடினமான ஃபைல்களைப் பார்ப்பதில் அவருக்குச் சலிப்பே ஏற்படாதாம்!

7) மேலே சொன்ன இரண்டு முறைகளில் எதைக் கடைபிடித்தாலும், ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்: செய்ய வேண்டிய வேலையைச் செய்துதான் தீர வேண்டும்.

தன்னம்பிக்கை எழுத்தாளர் கோப்மேயர் இவ்வாறு கூறுகிறார்:
செய்தே தீர வேண்டிய காரியத்தை,
செய்ய வேண்டிய நேரத்தில்,
உங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்,
செய்து முடிப்பது
என்ற நியதியைப் பின்பற்றினால்,
வெற்றி நிச்சயம்.

எனவே நீங்கள் மனதில் பதித்துக்கொள்ள வேண்டிய தாரக மந்திரங்கள் இரண்டு:
1) செய்ய வேண்டிய செயலை உரிய நேரத்தில் செய்வது
2) முக்கியமான விஷயத்துக்கு முதலிடம் கொடுப்பது.

8) ஒரு செயல் குறித்து உங்களுக்கு ஒரு உந்துதல் ஏற்பட்டால் மற்ற எல்ல வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, அதை உடனே செய்து விடுங்கள். ஏனெனில் அத்தகைய உந்துதல் ஏற்படும்போது உங்கள் செயல் திறன் மிகவும் கூர்மையாக இருக்கும். உந்துதல், உற்சாகம், சக்தி, ஈடுபாடு எல்லமே உயர் நிலையில் இருக்கும்போது, உங்களால் மிகச் சிறப்பாகச் செயல்பட முடியும். அந்த சந்தர்ப்பத்தைத் தவற விட்டு விட்டால், மீண்டும் அத்தகைய உந்துதல் நிலை எப்போது ஏற்படும் என்று சொல்ல முடியாது. எழுத்து, கலை, விளம்பரத்துறை போன்ற சிந்தனை சார்ந்த செயல்களில் ஈடுபட்டிருபவர்கள் இந்த உந்துதல் தருணங்களை அதிகம் சந்தித்திருப்பார்கள். எனினும் உடல் உழைப்பு தேவையான வேலைகளுக்கும் இது பொருந்தும். சிலருக்கு மூட் வந்தால் மணிக்கணக்கில் தோட்டவேலை செய்வார்கள். அல்லது வீட்டைச் சுத்தப்படுத்துவதிலோ, ஒழுங்கு படுத்துவதிலோ அல்லது அலங்கரிப்பதிலோ ஈடுபடுபவர்களும் உண்டு.

9) 'என்னால் முடியாது' என்று சொல்லப் பழகுங்கள். நம்மில் பலருக்கு ஒரு பலவீனம் உண்டு. மற்றவர்கள் ஏதாவது கேட்டால், உடனே சரியென்று சொல்லி விடுவது. மற்றவர்களுக்கு உதவுவதில் தவறில்லை. நம்மால் எந்த அளவுக்கு உதவ முடியும், அவ்வாறு உதவுவது நம் வேலைகளை எந்த அளவுக்கு பாதிக்கும் என்ற கேள்விகளுடன் அவர்களுக்கு உதவுவது அவசியம்தானா என்பதையும் யோசிக்க வேண்டும். நாம் பலவீனர்களாக இருந்தால் நம்மை மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்ள முயல்வார்கள். இதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. நம் உதவி தேவைப்படுபவர்களுக்கும், தகுதியானவர்களுக்கும் மட்டும்தான் உதவி செய்ய வேண்டும். அவசியமற்ற வேலைகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வதால் நம் நேரம் வீணாவதுடன், நமக்கு வேறு சில பிரச்னகளும் ஏற்படலாம். வேண்டாவெறுப்பாக ஒருவருக்கு உதவி செய்யும்போது, நாம் ஏன் இந்தப் பொறுப்பை ஏஏற்றுக்கொண்டோம் என்று நம் மீதே நமக்குக் கோபம் வரும். இத்தகைய மன அழுத்தங்கள் நமக்குத் தேவைதானா?

சில சமயம், மற்றவர்களின் அழைப்பை ஏற்று அவர்கள் வீட்டுக்குப் போவது, நமக்கு ஆர்வம் இல்லாத திரைப்படம் போன்ற நிகழ்ச்சிகளுக்குப்போவது இவற்றையும் தவிர்க்க வேண்டும். 'எனக்கு இதில் ஆர்வம் இல்லை' என்று பணிவாக, கேட்பவர் மனம் புண்படாத விதத்தில் மறுத்து விடலாம். அல்லது வேறு வேலை இருப்பதாகச் சொல்லி நழுவி விடலாம்.

10) ஒரு வேலையைச் செய்யும்போது அதனுடன் தொடர்புடைய வேறு சில வேலைகளைச் சேர்த்துச் செய்வது என்ற நடைமுறையைப் பழக்கிக் கொள்ளுங்கள். சற்றுத்தொலைவில் உள்ள ஒரு இடத்துக்குப் போகும்போது, அதற்குப் பக்கத்தில் நமக்கு ஏதாவது வேலை இருக்கிறதா என்று ஒரு நிமிடம் யோசித்தால் சில விஷயங்கள் மனதில் உதிக்கக் கூடும். கடைக்குப் போகும்போது, வழியிலோ பக்கத்திலோ இருக்கும் லாண்டிரியில் போட வேண்டிய துணிகளை எடுத்துச் சென்று போட்டு விட்டு வ்ரலாம். ஒரு இடத்துக்க்க் கிளம்புவதற்கு முன் ஒரு நிமிடம் யோசித்தால் பயனுள்ள சில சிந்தனைகள் தோன்றும். கடைக்குப் போகும்போது அங்கே அருகில் இருக்கும் நூலகத்தைப் பார்த்த பிறகுதான், 'ஆஹா! நூலகத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டிய புத்தகங்களை எடுத்து வந்திருந்தால், அவற்றைத் திருப்பிக் கொடுத்திருக்கலாமே!' என்று தோன்றும். எனக்குத் தெரிந்த ஒரு சிறு நிறுவனத்தின் மேலாளர், ஊழியர்கள் யாராவது வெளியே கிளம்பினால் அவர்களைச் சற்று நேரம் காத்திருந்து போகும் வழியிலோ அல்லது போகும் இடத்துக்கு அருகிலோ வேறு ஏதாவது வேலை இருக்கிறதா என்று நன்கு யோசித்து விட்டுத்தான்  கிளம்ப அனுமதிப்பார். அவரது இந்த அணுகுமுறையால், ஊழியர்களே இது போன்று சிந்தித்துச் செயல்படக் கற்றுக்கொண்டனர். ஆயினும் அவசரமாகப் போகும்போது இந்த அணுகுமுறையைக் கைவிட வேண்டும்.

கடைசியாக ஒரு விஷயம். காலத்துக்கும் ஓய்வு தேவை! எனவே எப்போதும் நேரத்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டே இருக்காதீர்கள். பிசியாக இருக்கும் நேரங்களில் காலத்தைப் பற்றிய உணர்வுடனே இருப்பதுபோல், ஓய்வாக இருக்கும் நேரத்தில் காலத்தைக் கொஞ்சம் மறந்திருங்கள். அப்போதுதான் காலத்துக்கும் உங்கள் மீது ஒரு பிடிப்பு ஏற்படும்!