Tuesday, October 30, 2012

புத்தாண்டில் ஒரு புதிய....

புத்தாண்டு என்றாலே முதலில் நினைவு வருவது (காலண்டரையும், டயரியையும் தவிர) புத்தாண்டுத் தீர்மானங்கள்தான். புத்தாண்டுத் தீர்மானங்கள் பெரும்பாலும் மீறுவதற்கென்றே செய்யப்படுபவை - தேர்தல் வாக்குறுதிகளைப்போல. புத்தாண்டுத் தீர்மானம் என்பது ஜோக் எழுதுவதற்கான ஒரு விஷயம் என்றே ஆகி விட்டது. இதைப்பற்றிக் கொஞ்சம் தீவிரமாக யோசித்தால் என்ன?

புத்தாண்டு தினம் இன்று அனைவர்ரலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றே சொல்லலாம். கால ஓட்டத்தில் வந்து போகும் கணக்கற்ற நாட்களில் புத்தாண்டு தினமும் ஒன்று என்ற உண்மையையும் மீறி, இந்த தினம் நம்மில் பலரிடையே பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.தினசரி வாழ்வில் எவ்வளவோ முயன்றும் எளிதில் வசப்படாத இந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியான எதிர்பார்ப்பையும், நம்பிக்கை நிறைந்த மனப்போக்கையும் பயன்படுத்திக் கொள்ளாமல் வீணாக்கலாமா?

இந்த நோக்கில் பார்க்கும்போது, புத்தாண்டுத் தீர்மானங்கள் பெரிய விஷயமாகத் தோன்றுகின்றன. வரப்போகும் ஆண்டில் நான் என்ன செய்யப் போகிறேன், எப்படி என்னை மாற்றிக் கொள்ளப்போகிறேன், எத்தகைய இலக்குகளைக் குறிவைத்து நடக்கப் போகிறேன் என்றெல்லாம் நமக்கு நாமே செய்து கொள்ளும் உறுதிகளை நம்மால் நிறைவேற்ற முடிந்தால், வாழ்க்கைப் பாதையில் விரைந்து முன்னேறுவது என்பது நமக்கு ஒரு இயல்பான ஒரு விஷயமாகி விடும்.

ஆனால் நம்மில் பலருக்கு இது முடியாத விஷயமாகப் போய்விடுகிறது. தீர்மானங்களை இயற்றுவதில் இருக்கும் தீவிரம் அவற்றைச் செயல்படுத்துவதில் இருப்பதில்லை - நமது ஐந்தாண்டுத் திட்டங்களைப்போல! புத்தாண்டு பிறந்து ஓரிரு வரங்களுக்குள்ளேயே நமது உற்சாகமும், தீவிரமும் மார்கழிப்பனி தையில் மறைந்து விடுவதுபோல் மங்கி ஒடுங்கி விடுகின்றன.

இதற்குக் காரணம் என்ன என்று யோசிப்பதை விட, இதற்கு மாற்று என்ன என்று யோசிப்பது சுலபமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.

நீங்கள் புத்தாண்டுத் தீர்மானங்களை மேற்கொள்ளும் வழக்கம் உள்ளவராக இருந்தால், ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு, இந்த வருடம் நீங்கள் எடுத்துக் கொண்ட தீர்மானங்கள் என்ன, சென்ற வருடம் மேற்கொண்ட தீர்மானங்கள் எவை, அதற்கு முந்திய வருடம்..என்று நினைவு படுத்திக்கொண்டு ஒரு பட்டியலிடுங்கள்.

உங்களால் இவற்றை நினைவு கூர முடிந்தால் கொஞ்சம் ஆச்சரியமான ஒரு விஷயத்தைக் கவனித்திருப்பீர்கள்.

சென்ற ஆண்டு எந்தத் தீர்மானங்களை  மேற்கொண்டீர்களோ அதே தீர்மானங்களைத்தான் (ஒரு சில மாற்றங்களுடன்) இந்த ஆண்டும் எடுத்துக் கொண்டிருப்பீர்கள். மிகப் பெரும்பாலோனோர் விஷயத்தில் இப்படித்தான் இருக்கும்.

திட்டமிட்டு வாழ்வில் முன்னேறும் ஒரு சிலரைப் ப்ற்றி நான் இங்கே கூறவில்லை. அது போன்ற சிலர் இந்தக் கட்டுரையைப் படிக்க நேர்ந்து, நான் மேலே குறிப்பிட்டுள்ள கருத்தைக் கடுமையாகச் சாட நினைத்தால், என்னுடைய பணிவான வணக்கங்களைப் பெற்றுக்கொண்டு இத்துடன் இந்தக் கட்டுரையைப் படிப்பதை நிறுத்திக் கொள்ளலாம். இது ஒரு சராசரி மனிதனின் அனுபவத்தின் அடிப்படையில் அவன் போன்ற மிகப் பெரும்பான்மையான சராசரி மக்களுக்காக அவனால் எழுதப்படுவது.

எனவே, சராசரிகளே! நாம் என்ன செய்கிறோம் என்றால் நேற்று கொஞ்சம் மாவை அரைத்து ஃபிரிட்ஜில் வைத்தோம். இன்று அந்த மாவை வெளியே எடுத்து மீண்டும் அதை அரைக்கிறோம். நாளை மீண்டும்.... மொத்தத்தில் அதே மாவுதான் திரும்பத் திரும்ப அறைக்கப்படுகிறதே தவிர, அதிலிருந்து இட்லியோ, தோசையோ உருவாக்கப் படுவதில்லை.

சென்ற ஆண்டு மிகுந்த அக்கறையுடன் நாம் செய்து கொண்ட தீர்மானங்களை நிறைவேற்ற முடியாமல், இந்த ஆண்டு அவற்றையே மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டிலும் இவை புதுப்பிக்கப் பட்டவைதான்.

"ஒவ்வோரு ஆண்டும் அதே தீர்மானங்களைத்தான் எல்லோருமே மேற்கொள்கிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? சிலர் ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாகத் தீர்மானங்கள் செய்து கொண்டு  அவற்றைக் காற்ற்ரில் பறக்க விடுபவர்களாக இருக்கலாமே  என்று சில சிந்தனையாளர்களுக்கு (அதாவது உங்களுக்கு)த் தோன்றக் கூடும்.

இவ்வாறு நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்று மனோதத்துவ ரீதியாகக் கணிக்கலாம். நமது தோல்விகளை  மறப்பது நமது இயல்பு அல்ல. நம்மால் செயல் படுத்த முடியாமல் போன தீர்மானங்கள் நம்மை அவ்வளவு சுலபமாக விட்டு விட மாட்டா! சிந்துபாதின் தோளில் ஏறிய கிழவன்போல (முழுக்கதையை அறிய  கடந்த ஐம்பது ஆண்டு தினத்தந்தி இதழ்களைத் தொடர்ந்து படிக்கவும்!) அவை நம்மை அலைக்கழித்துக்கொண்டே இருக்கும். இந்த மன உறுத்தலிலிருந்து மீள ஒரே வழி அதே தீர்மானஙளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதுதான்.

அதே தீர்மானங்களைத் திரும்பத் திரும்பத் துரத்துவதன் விளைவு என்ன என்பதை விளக்க வேண்டியதில்லை. ஸ்டாண்ட் போடப்பட்ட சைக்கிளில் உட்கார்ந்து பெடல் செய்வதுபோல, இருந்த இடத்திலேயே இருக்க வேண்டியதுதான்!

அப்படியானால் , புத்தாண்டுத் தீர்மானங்கள் எதுவுமே இனி செய்து கொள்வதில்லை என்ற தீர்மானத்தை இந்த ஆண்டு செய்து கொள்லலாமா? (இந்தத் தீர்மானத்தில் ஒரு சௌகரியம் என்னவென்றால் இதை வருடா வருடம் புதுப்பிக்க வேண்டியதில்லை.)

தேவையில்லை!

மாறாகக் கொஞ்சம் வித்தியாசமான புத்தாண்டுத் தீர்மானங்களை மேற்கொண்டால் என்ன?

ஐ.நா. சபை ஒவ்வொரு வருடத்தையும் ஒரு ஆண்டாக அறிவிக்கிறது - ஊனமுற்றோர் ஆண்டு, பெண்கள் ஆண்டு, குழந்தைகள் ஆண்டு, முதியோர் ஆண்டு என்று. பல துறைகளிலும்  தன் பணிகள் தொடர்ந்தாலும், ஐ,நா. சபை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பிரச்னையின் மீது கவனம் செலுத்துவதுபோல....
புத்திசாலிகள் (அதாவது நீங்கள் எல்லோருமே) நான் சொல்லப் போவதை ஊகித்திருப்பீர்கள்.

வாழ்க்கையில் நமக்குப் பல இலக்குகள்: உண்டு. ஒரே நேரத்தில் பல இலக்குகளுக்குக் குறி வைப்பதால், நமது கவனம் சிதறி, முயற்சிகளின் கூர்மை குறைந்து இலக்குகள் நழுவுகின்றன. ஐ.நா. சபையைப் போல் நாமும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலக்கைக் குறி வைக்கலாமே!

உதாரணமாக நமக்கு மேற்படிப்பில் நாட்டம் இருக்கலாம். அத்துடன் இசையில் ஈடுபாடு, வேறு பொழுது போக்குகள் இருக்கலாம். இவற்றில் இந்த அண்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறோம் என்று தீர்மானித்துக் கொண்டு, அதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவெடுத்தால் அதை நிச்சயம் நம்மால் நிறைவேற்ற முடியும். இந்த விஷயத்தில்  ஒரு குறிப்பிட்ட அளவு முன்னேறி விட்டோம் என்றால் அதற்குப் பிறகு அடுத்த ஆண்டு இன்னொரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதற்கு இலக்கு நிர்ணயித்துக் கொள்ளலாம்.


நமது முயற்சிகள் நாம் எடுத்துக்கொண்ட இலக்குகளைக் குறி வைத்தே இருக்க வேண்டும் என்பதால், நமக்கு ஆர்வமுள்ள மற்ற விஷயங்களை அடியோடு விட்டு விட வேண்டும் என்பதில்லை. ஐ.நா. சபை உதாரணத்தை மனதில் கொண்டு, எடுத்துக் கொண்ட இலக்கில் இடைவிடாத கவனமும், மற்ற விஷயங்களில் அளவான கவனமும் செலுத்திச் செயல் படலாம்.

சரி, இப்படிச் செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என்கிறீர்களா?

முதலில் வாழ்க்கையை நம்மால் ஒழுங்காக அமைத்துக்கொள்ள முடியும். வீட்டில் குழந்தைகள் கலைத்த்ப் போட்டவற்றைப் பெரியவர்கள் எடுத்து ஒழுங்காக அடுக்கி வைத்தது போன்ற ஒரு சீரான அமைப்பும், முறையும் இருக்கும்.

இரண்டாவதாக, ஒரு இலக்கில் மட்டும் அதிக கவனம் செலுத்துவதால், நமது மனமும் செயலும் ஒருமுகப்பட்டு அந்த இலக்கை நிச்சயம் அடைய வகை செய்யும். நாம் ஒரு தெளிவான இலக்கை ஏற்றுக்கொண்டால், நம் உள்மனம் அதை அடைவதற்கான பணிகளைத் தேர்ந்தெடுத்த்ச் செய்து இலக்கு நோக்கி நம்மை இயக்கும் என்பது ஒரு மனோதத்துவ உணமை.

மூன்றாவதாக, ஒரு இலக்கை எடுத்துக் கொண்டு அதை நாம் எட்டி விட்டால், பிறகு வேறு எந்த இலக்குகளை எடுத்துக் கொண்டு செயல் பட்டாலும், அவற்றை அடைவது என்பது நமக்கு ஒரு இயல்பாகவே அமைந்து விடும்.



நான்காவதாக, வாழ்க்கையில் சோர்வு நீங்கி, ஒரு புதிய உற்சாகமும், நம்பிக்கையும் நிரம்பி வழியும்.

இந்த வழியை நாம் ஏன் முயன்று பார்க்க்க் கூடாது?

எப்படித் துவங்குவது என்கிறீர்களா?

ஒரு வேலையை முறையாகத் துவங்கினாலே, அந்த வேலை பாதி முடிந்தது போல்தான் என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி.

இந்தக் கட்டுரையைப் படிப்பதையே ஒரு துவக்கமாக எடுத்துக் கொண்டு மேலே தொடருங்கள்.

புத்தாண்டு வரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. என்று நாம் ஒரு புதிய முயற்சியைத் துவங்குகிறோமோ, அந்த நாளே ஒரு புத்தாண்டின் துவக்கம்தான். எனவே நீங்கள் இப்போதே  துவங்கலாம்.

உங்கள் விருப்பங்கள், லட்சியங்கள், தாகங்கள் என்ன என்று யோசியுங்கள். அவற்றை நிறைவேற்ற இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள் என்று நினைத்துப் பாருங்கள். முடிந்தால் நீங்கள் செய்த முயற்சிகளைப் பட்டியலிடுங்கள். இவற்றில் நீங்கள் எதை முக்கியமானதாகக் கருதுகிறீர்கள் என்று திர்மானியுங்கள். அந்த லட்சியத்தை நிறைவேற்ற உடனடியாக என்ன செய்ய முடியும் என்று நினைத்த்ப் பாருங்கள்.



ஒரு விஷயம்.

இவற்றையெல்லாம் நீங்கள் செய்யும்போது உங்களுடன் இரண்டு நண்பர்கள் உடனிருந்தால் நல்லது. ஒரு பேனா, ஒரு நோட்டுப் புத்தகம்.

மனதில் தோன்றும் எண்ணங்களையெல்லாம் எழுதுங்கள். அலசுங்கள். வடிகட்டுங்கள். தேர்ந்தெடுத்தவற்றை வரிசைப் படுத்துங்கள்.

தூக்கம் வரும். வந்தால் உடனே தூங்குங்கள். தூங்கும்போதும், விழித்த பின்னும், சில யோசனைகள் வரும். அவற்றில் சில், மிக அற்புதமாகவும் இருக்கக் கூடும். அவற்றை உட்னே குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மனதில் தோன்றும் எல்லா எண்ணங்களையும் விடாமல் குறித்துக் கொள்ளுங்கள். இவற்றில் சில பயனற்றதாக இருக்கலாம் அதுபற்றி அப்புறம் யோசித்துக் கொள்ளலாம். எண்ணங்களத் தொடர்ந்து எழுத்ம்போது மேலும் மேலும் புதிய யோசனைகள் உருவாகும்.

இந்த முயற்சி பிரசவ வேதனை போன்ற ஒரு வேதனையை ஏற்படுத்தும். முயற்சி திருவினையாகும்போது உங்களுக்குக் கிடைக்கும் பரிசும் ஒரு குழந்தை போன்று அருமையானதாக இருக்கும். மெல்லப் புலரும் பொழுதுபோல் ஒரு வாழ்க்கைத் திட்டம் மெல்ல மெல்ல வெளிவரும். 'நண்பர்களின்' உதவியுடன் அதைப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.முதலில் கொஞ்சம் தெளிவில்லாமல் இருந்தாலும் ஒரு சில நாட்களில் முழு உருவம் தெரியும்.

அதன்பிறகு வேலை சுலபம்தான். ஐந்தாண்டுகளில் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானியுங்கள். பிறகு அடுத்த ஒரு ஆண்டில் என்ன செய்யலாம் என்று தீர்மானியுங்கள். இந்த மாதம் என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள். அப்புறம் இந்த வாரம். கடைசியாக இன்று என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்யுங்கள்.

இன்னும் ஒரே ஒரு வேலைதான் பாக்கி. இன்று என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்தீர்களோ அதை இன்றே செய்து முடியுங்கள். 'ஆயிரம் மைல் பிரயாணம் முதல் அடி எடுத்து வைப்பதில்தான் தொடங்குகிறது' என்பது ஒரு சீனப் பழமொழி. எனவே முதல் அடியை நீங்கள் எடுத்து வைத்து விட்டாலே இலக்கு நோக்கிய உங்கள் பயணம் தொடங்கி விட்டது என்று பொருள்!